செவ்வாய், 4 அக்டோபர், 2011

மேதைகளின் பத்து அறிவுகள் ( வெற்றிக்கு ஒரு புத்தகம் )

    ஜீனியஸ் பார்முலா அதாவது "மேதைகளின் சூத்திரம்"  என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள் டோனி பூசன்  என்ற அறிவியல் அறிஞரும் பிரபல  செஸ் வீரர் ரேமன்ட் கீன்னும்

                  இதில் ஜீனியஸ் என்பவர் யார், அவர் எப்படி உருவாகிறார், நீங்களும், நானும், அந்த அளவிற்கு அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்கு என்ன வழி என்று சொல்லித் தருகிறது இந்த புத்தகம், மேதைகளின் அம்சங்களாக அவர்கள் குறிப்பிடுவது பத்து அறிவுகளை 






1  சொல் அறிவு :- (Verbal Intelligence)
         மொழி வளத்தை  மேம்படுத்திக்கொள்வது, புதிய வார்த்தைகளைப் பயன் படுத்துவதில் உள்ள அறிவு. நம் எல்லோருக்கும் ஒரு முக்கியமான பயிற்சி, மிக அவசியமான தேவை.


2  எண் அறிவு :- (Numerical Intelligence)

         ஒரு துணிக்கு இரண்டரை ரூபாய்  என்றால், பத்தொன்பது துணிக்கு நாற்பது ஏழு ரூபாய், என்று கணக்கு போடும் துணிகடைகாரரில் இருந்து  மாதந்திர தொலை பேசி கட்டண விபரம் சரியாக வந்திருக்கிறதா என்று பார்பதுவரை  சகலத்துக்கும் சகலருக்கும் கணக்குத் தேவை படுகிறது. இங்கே  சொதப்பினால் உங்களுக்குப் பல விதங்களில் இழப்பு.

3 படைப்பு அறிவு :- (Creative Intelligence)

          வழக்கத்தை மீறி புதுமையாக சிந்திப்பவர்கள் தான் வித்தியாசமான படைப்புகளை உருவாக்குகிறார்கள். நம்முடைய தினசரி வேலைகளை கூட வழக்கத்திலிருந்து மாறுபட்டுப் புதுசாகச் செய்து பழகலாம். அதனால் கிடைக்கும் உற்சாகம் அலாதியானது. சந்தேகமிருந்தால் தினம் ஒரு வடிவில் தோசை செய்து  அசத்துகிற தாய்மார்களை கேட்டு பாருங்கள்.

4  இன்ஜினியரிங் அறிவு :- (Engineering Intelligence)

           " இன்ஜினியர்" என்றவுடன் நாம் வீடோ, பாலமோ கட்டப்போகிறோம் என்று நினைத்துவிடாதிர்கள். நம்மை சுற்றியுள்ள வெளியின் தன்மையை
தெளிவாக புரிந்து வைத்திருப்பவர்கள் தான்  "இன்ஜினியரிங் அறிவு" என்கிறது மேதைகளின் சூத்திரம்.

5  மற்றவர்களோடு கலந்து பழகும் அறிவு :- (Interpersonal Intelligence)
            "ஊர் கூடித் தேர் இழுப்பது" என்று நம் ஊரில் சொல்வார்களே, அந்த மற்றவர்களுடன் பழகும் "சகிப்புத்தன்மை" கலந்த புரிதல்தான் இந்த அறிவு.

6  நம்மை நாமே புரிந்து கொள்வதற்கான அறிவு :- (Intrapersonal Intelligence)

             உங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? பலங்களை மேலும் வளர்த்து கொள்வதற்கும் பலவீனங்களை சரி செய்வதற்கும் என்ன வழி என்று சிந்திப்பது தான்  இந்த அறிவு.
7  புலன் அறிவு :-  (Sensory Intelligence)

           பார்த்தல், கேட்டல்.நுகர்தல், சுவைத்தல் என நம்முடைய ஒவ்வொரு புலனையும் நாம் அறிகுறியாகவே பயன் படுத்திக்கொண்டிருக்கிறோம். அதை மேலும் முழுமையாக்கினால் பல புதிய வாய்ப்புகள் கதவை திறக்கும்.

8  உடல் அறிவு :- (Physical Intelligence)

         உடலை கட்டுக் கோப்பாக வைத்துகொள்வது பற்றிய அறிவு. ஆரோகியமான  உடல்நிலைக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எதைச் சாபிடலாம், எதை சாப்பிடக் கூடாது என புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உடலுக்கும், அறிவுக்கும் நல்லது.

9  ஆன்மிக அறிவு :- (Spiritaal Intelligence)

           இங்கே "ஆன்மீகம்" என்றால் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவதைச் சொல்லவில்லை. நாம் வாழும் இந்த உலகத்தை, இயற்கையை, மனிதர்களை,
விலங்குகளை, மரம், செடிகளையெல்லாம், புரிந்து வைத்திருப்பது. அவற்றோடு ஒத்தினசந்து வாழப் பழகுவது.

10 அறிவுகளின் அறிவு :- (Intelligence Of Intelligence)

            இத்தனை அறிவுகளையும் எப்போது எதைப் பயன்படுத்த வேண்டும், 
குறைபட்டதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும், என்கிற சரியான புரிதல் நமக்கு இல்லாவிட்டால் எத்தனை அறிவு இருந்தும்  பயன்படாது.  வீடு நிறையப் பாத்திரங்களை அடுக்கி வைத்துகொண்டு சமைக்கத் தெரியாமல் இருப்பதைபோலதான். இதைத்தான் இந்த பத்தாவது அறிவு சுட்டிக்காட்டியிருக்கிறது . இத்தனை அறிவுகளையும் வளர்த்துக்கொண்டால்  வெற்றி தான்

                                              ----------- இரா.குமரன் ----------------

சனி, 10 செப்டம்பர், 2011

அதிர்ச்சி அர்த்தமற்றுப் போனது.


      "அதிர்ச்சி என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தமே இல்லை!
ஒரு சாமான்யன், ஒரு நாளைக்கு எத்தனை முறை தான் அதிர்ச்சியாவது?
பேருந்து நிலையத்தை கடக்கும் போது, "வெள்ளை காமராசர் சரத்குமார் அழைக்கிறார்", என சுவரில் எழுதி இருக்கிறார்கள். பக்கத்திலேயே "கருப்பு சேகுவேரா அழைக்கிறார் சீமான்". உச்சமாக, சுபாஷ் சந்திரபோஸ் கழுத்தில் கருணாஸ்.

            மட்ட மத்தியானம் பேலன்ஸ் இல்லாத மொபைலுக்கு, "உங்களோடு பேச அழகிய இளம்பெண்கள் காத்திருக்கிறார்கள். செக்சி மற்றும் ஹோம்லி" என எந்த நாய் மெசேஜ் அனுப்புவது? பிரபுதேவா - நயன்தாரா காதல் பற்றி தங்கர் பச்சானிடம்  எதற்கு கருத்து கேட்கிறார்கள்? பாரதி ராஜா படத்தில் மாட்டு டாக்டர், வாத்தியார் கேரக்டரில் வரும் ராஜா மாதிரி, உத்திரப்பிரதேசக் கிராமங்களில் சுற்றி திரியும் ராகுல்காந்தி தான் நமது அடுத்த பிரதமாரா?
எங்கெங்கும் பிதுக்கப்பட்டுக் கிடக்கும் வாட்டர் பாகெட்டுகளால் இந்த மண் அடையும் அதிர்ச்சியை நம்மில் எத்தனை பேர் அடைவோம் நண்பர்களே?

            ஊழல் என்ற சொல்லின் கனத்தை இழக்க வைத்தவர்களை, கொடூரங்களை  செய்தியாக அறையும் ஊடகங்களை, இவ்வளவு நீளமான ஐ.பி.எல். நடத்தி கல்லா கட்டுபவர்களை, பெட்ரோல், காஸ், விலையை ஏற்றி விட்டு பி.எம்.டபிள்யூ, சிக்ஸ்த் சீரியலுக்கு வரி குறைப்பவர்களை, தேங்காய் பத்தைகளோடு இலவச மிக்சிக்குக் காத்திர்ப்பவர்களை, இன்னமும் ஐ.சி.யு. சீன் வைக்கிற சீரியல்காரர்களை, இந்திகாரர்கள் பாடும் தமிழ் பாடல்களை, தமிழ்நாட்டில்  வறுமை கோடே இல்லை என்று அறிவிக்கும் அதிகாரத்தை, அத்தனை நாயர்களும் டீக்கடை போட்டுக்கொண்டு திரியும்போது 1 இலட்சம்கோடி நகைகளைக் கோயிலுக்குள் பதுக்கிவைத்த மன்னர்களை, ஈழத்து இசைப்பிரியாக்கள் சிதைந்து கருகும் சேனல்4 காட்சிகளை ரிமோட்டில் தாண்டும் தமிழர்களை ........
கடந்து தான் இந்த வாழ்க்கை என்றால் ஒரு சாமானியன் ஒரு நாளைக்கு எதனை முறை தான் அதிர்ச்சியாவது? 



                      --------ராஜு முருகன்  (வட்டியும் முதலும் கதையிலிருந்து)
                                                       (நன்றி  ஆனந்த விகடன்)

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

பேரம் பழகு (தன்னம்பிக்கை புத்தகம்)




                        உங்களுக்கு பேரம் பேச தெரியுமா? தள்ளுவண்டியில் காய்கறி விற்கிறவரிடம் எட்டணா விலை குறைக்கச் சொல்லி அதட்டுவதில் ஆரம்பித்துப் பல நாடுகளுக்கு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள்வரை எல்லாவற்றுக்கும் பேரம் பேசும் கலை அவசியப்படுகிறது. இதை சரியானபடி தெரிந்து கொண்டு பேசுபவர்கள் எந்த விவாதத்திலும் தோற்கமாட்டார்கள்.

                         பேரம் பேசுவது, அதன் மூலம் நமக்கு வேண்டியவற்றை பெற்றுக் கொள்வதன் அடிப்படை நுட்பங்களை சொல்லித்தருகிற ஒரு நல்ல புத்தகம் "Negotiate To Win" இதனை எழுதியிருப்பவர் வாசிங்டனைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், ஜிம்தாமஸ்.
                        பேரம் பேசுவதன் மூலம் வெற்றிகளைப் பெற எளிய விதிமுறைகளை  ஜிம்தாமஸ் பட்டியலிடுகிறார் அவை,

                         1 ஒரு விஷயத்தை பேரம் பேசுவதற்கு முன்னால் அதைப் பற்றி நன்றாக கேட்டு, படித்து, சிந்திதித்து தெரிந்துகொள்ளுங்கள்.

                         2 முடிந்தவரை எதிராளியை முதலில் பேச விடுங்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

                         3 நீங்கள் ஒரு பொருளை 10 ரூபாய்க்கு விற்க நினைத்தால் 30 ரூபாயில் பேரத்தை ஆரம்பியுங்கள். அதே பொருளை நீங்கள் வாங்குவதானால் 4 ரூபாயில் பேச்சை தொடங்குங்கள்ம, அப்போது தான் இறுதியில் 10 ரூபாய்க்கு பேரம் முடியும்.

                         4 ஒரு வேலை எதிராளி பேரத்தை தொடங்கினால், அவர்கள் சொல்லும்  தொகையைப் படாரென்று கீழே இறக்குங்கள்.

                        5 ஒரு வேளை எதிராளி சொல்லும் ஆரம்பத் தொகையே நியாயமாகத் தோன்றினாலும் அப்போதும் அதை சட்டென்று ஒப்புக்கொண்டுவிடக்கூடாது.

                        6 சில சமயத்தில் ஒரே நேரத்தில் பல விசயங்களைப்பற்றிப் பேரம் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும், அப்போது முதலில் சிக்கலில்லாத சிறிய விசயங்களைப் பற்றி பேசுங்கள்.

                         7 எந்த விவாதத்தின் போதும் ஆரம்பத்தில் நிறைய விசயங்களை விட்டுத்தருவதுபோல நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்குங்கள். எதிராளிக்கு உங்களைப் பிடித்துவிடும். நீங்கள் கையைப் பிடித்து முறுக்கினாலும் வலிக்காமல்  சிரிப்பார்கள், சம்மதிப்பார்கள்.

                          8 பல விசயங்களை மொத்தமாக பெசிக்கொண்டிருக்கும்ப்போது இடையிடையே சில தற்காலிக தீர்வுகள் தோன்றும், அதில் திருப்தி அடையாதிர்கள்.

                          9 ஒரு மிகப் பெரிய பேரம் முடிவுக்கு வரும்போது, சட்டென்று சிரித்து கைகுலுக்கி விடாதிர்கள்.

                         10 எந்த பேரத்திலும் இது அல்லது அது தான் உள்ளது என்று நினைக்காதிர்கள், இவை இரண்டுக்கும் நடுவே மூன்றாவது ஒரு நல்ல தீர்வு இருக்கக்கூடும்.

                          நட்பும் நல்லுறவும் முறிந்துவிடாமல் பேரம் பேசுவதே எல்லாவற்றிலும் விட முக்கியம்.

                                    ----------- இராவணப் பாண்டியன் --------------

புதன், 7 செப்டம்பர், 2011

பக்தி வந்தால் புத்தி போய் விடும்! புத்தி வந்தால் பக்தி போய் விடும்!







மார்கழி விழா :- 

மார்கழி வந்தால் போதும் 
பார் கிழியப் பாடுகிறான் பக்திப்பாட்டு!
ஊர் உறங்கும் நேரத்தில் 
ஒலிப்பெருக்கி உதவியுடன் 
சீர்கெட்ட பாட்டையெல்லாம்
தினம் தினம் ஒலித்துடுவர் 
                                                             ஊர் உறக்கம் கெடுமென்று
                                                             உணர்வில்லாமல்,
                                                            கோர்வையாய்ப் பாடல்களை 
                                                             குரல்வழியே பரப்பிடுவர். 

"புற்றவல்குல் புனமயிலே போதராய்"

கற்ற திருப்பாவையைக் காதுகிழியக் கத்தினான் ஒருவன் உறக்கம் 
கெட் டெழுந்த ஒரிளைஞன் உணர்ச்சி மேலீட்டால்,......
"ஆ" என்று பல்கடித்தான். அழுத்தினான் தலையணையை! அவன் மீது குற்றமென்ன? அடங்காத குளிர்காலம் அப்போதோ அதிகாலை அவன் உணர்வினை கிளறியது. ஆண்டாளின் திருப்பாவை!
ஆர்த்தெழுந்த அவனுணர்வின் அடைக்கலம் அவன் தலையணை!
தீராத உணர்வோடு எழுந்தவன் திரும்பி நண்பனைக் கேட்டான், 
"நண்பா பாம்பு படம் போன்ற பெண்ணுருப்பை பெற்றவளே என்னருகே எழுந்துவா! என்று எவளை அழைக்கிறான்?" அடப்பாவி  அவனை அழைக்க எவருமில்லை அவன் பாடுகிறான் திருப்பாவை என நண்பன் விளக்கினான்.

திடிரெனக் கேட்டது அய்யப்பன் பாடல் 

"அரிக்கும் அரனுக்கும் அதிசயமாய் தோன்றியவன் அய்யப்பன்"
அழுத்தம் திருத்தமாய் சொன்னார் ஒருவர் "அரியும் அரனும் ஆனல்லவா?"
அருகிலுருந்த அன்பன் ஆமாம் என்றான். அடுத்தவன் அரும்பிய சிரிப்போடு திருப்பாவை கிளறிவிட்ட தீராத உணர்வில் இருப்புகொள்ளாதிருந்த அவனை அய்யப்பன் கதை ஆவேசப்படுதியது. அடங்காத உணர்வோடு அப்படியே பாய்ந்தான் அவன் நண்பன் மீது "அப்பா! நான் அறியல்லடா!"
அங்கிருந்து அகன்றான் அவன் நண்பன்.


மாசி மகம் :-
அன்று சமுத்திரமும்,மூத்திரமும் சமத்துவம் சகோரத்துவம் என்று கூட்டணி சேர்ந்து கொள்ளும்.குமரிக் கடலின் சமுத்திர ஜலத்தாலும், கும்பகோணத்தின் மூத்திரக் குளத்தாலும் பாவங்கள் கழுவப்படும்.



வைகாசி விரையம் :-

வைகாசி வந்தால் போதும் கைகாசைச் செலவிட்டு கண்ட கோவில்களுக்குத் தென்டப் பூசைகள் தீவிரமாய் நடந்துவிடும். பாலையும் தேனையும் கல்லில் ஊற்றிப் பக்தியைக் காட்டிப் பரவசமடைவர் செங்கல்லும் கருங்கல்லும் செய்த புண்ணியத்தை ஏங்கும் வயிற்றோன் ஏழை செய்ததிலையோ? எண்ணும்போது எரிச்சல் எழுகிறது!


















முருகன் :-

முருகனின் படைவீடெல்லாம்
முழுவீச்சில் எழுந்து நிற்கும்!
ஆறு படை வீடு என்பதெல்லாம்
அந்தக்காலம்! இப்போது
எத்தனைப் படை வீடென்று
எண்ணிப் பார்க்கும்போது
பக்தனுக்கு ஒரே குழப்பம்!
ஏனெனில், பகவானுக்கும் அதே குழப்பம்
செத்துப்போன சின்னப்பத் தேவர்
சினிமாவில் செய்த கலாட்டாவால்
ஆறு படை வீடுகளுக்கு
அடிஷ னல் படை வீடுகளாக 
அன்றாடம் ஒன்று முளைக்கிறது!
அதனால் மருதமலையிலிருந்து
பரங்கி மலை வரை 
அபிசியல் வீடு எது 
அன்னபிசியல் வீடு எது என்று 
அடையாளம் காண்பதில் 
ஆண்டவனுக்கே குழப்பம்!
அடியவர்களுக்கு குழப்பம் வராதா?
உருக்கமுடன் அழைத்தால் 
இருக்குமிடம் தேடிவருவான் என்று
சீர்காழி பாடியது சரியாகிவிட்டது!
தேசத்தின் பாதி ஜனத் தொகை 
இருக்குமிடம் எது என்று 
இறைவனுக்கு தெரியாமல் போகுமா?
அதனால் தான் 
பிளாட்பாரத்திற்கு 
குடிபெயர்ந்து விட்டான்
பிரணவ மூர்த்தி!
இப்போதெல்லாம் 
முருகன் கோயில் கொள்ளும் பிரகாரம் 
ஊரெங்கும் உள்ள பிளட்பாரம்!
அதுபோதும் துயரங்களுக்கு பரிகாரம்!
அதனால் தான் தேசமெங்கும் 
அவன் யுனிபாரம்! கோவணம்..........
தேசிய உடையாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.




அய்யப்பன் 

அய்ப்பசி முடிவில் 
அய்யப்பன் ஆட்சி கொள்வான்! ஆம் 
திருப்பதி செல்வாக்கு 
சபரிமலைக்கு திசை மாறும்!
ஆசாமி சாமியாவான்
அனுபவம் அதிகமானால் 
அவனே குருசாமியாவான்!
ஆளுக்கொரு "கலர்" துணியை 
அறையிலே கட்டிக்கொண்டு 
நாளுக்கு நாள் தாடியை 
நன்றாக வளர விட்டு 
கோளுக்கு மனிதன் சென்று
கொடி நாட்டும் காலத்தில் 
ஆணுக்குப் பிள்ளை 
அதிசயமாய்ப் பிறந்ததென்று 
அல்பமாய்ப் பொழுதை 
வெட்டியாய்க் கழித்திடுவர்!


கார்த்திகை தீபம் 

அய்யோ பசி! என்று
அவலக் குரல் எழும் நாட்டில் 
பொய்யால் புனைந்த 
புராணக் கதையை நம்பி
நெய்யால் தீபம் ஏற்றுவர்.
நெடுவரையில் (அண்ணாமலையில்)
கண்மூடிக் கிடக்கின்ற 
கணக்கற்ற மக்களின் 
கடைந்தெடுத்த அறியாமை
வின்முட்டி எரிகின்ற
விபரீத நிலை மாற்றி 
அண்ணாமலையில் 
அறிவு ஒளி வீசும் 
அய்யா (பெரியார்) விளக்கை
அணையாமல் ஏற்றிவைப்போம்.
அனைவரும் வாரீர்!

-----மஞ்சை வசந்தன்-------(அர்த்தமற்ற இந்துமதம் நூலிலுருந்து )

சனி, 3 செப்டம்பர், 2011

கமலஹாசன் எனும் விஷ்ணுதாசன்

உலக நாயகானக எல்லோராலும் அறியப்படும் கமல், பகுத்தறிவுவாதியாக வேடமிடும் பார்ப்பன நாயகன். அவரின் பகுத்தறிவு வாதத்தில் உள்ள உண்மைகளை அறிய முயன்றால் கிடைப்பதோ வைணவப் பார்ப்பானியம். வெறுமனே பிறப்பின் அடிப்படையில் மட்டுமே  ஒருவரை சாதிய குறியிட்டு அழைக்க வேண்டி இக்கட்டுரை எழவில்லை. அவரது பகுத்தறிவு சைவத்தை குறை கூறுவதாக மட்டுமேயன்றி வைணவத்திற்கு ஆதரவு சேர்ப்பதாகவும் உள்ளதால், திரு. கமல் அவர்களின் திரைப்படம், பாத்திரம், பாடல், குடும்பம், நட்பு, ஆகியவற்றில் உள்ள பார்ப்பானியத்தை வெளிப்படுத்தவே இக்கட்டுரை.

                             * "மகாநதி" படத்தில் "ஸ்ரீ ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி"
எனும் பாடலில் தொடங்கி "மன்மதன் அம்பு" வரை வைணவப் பார்ப்பானராக நூல் பிடிப்பவர் தான் கமல்.

                             * "ஹேராம்" படத்தில் மகாத்மா காந்தியையே கொல்ல முற்படும் பார்ப்பானிய வேடத்தில் (RSS) நடித்தவர் தான் கமல்.

                             * "அன்பே சிவம்" படத்தில் ஒருகாட்சியில், தனது பார்ப்பான வாரிசான மாதவனிடம் திருக்குறளுக்கு விளக்கம் சொல்லவேண்டி, வள்ளுவனை "மைலாப்பூர் மேன்; ஒயிட் பியர்டு மேன்;நியர் சேன்ஸ்கிரிட் காலேஜ்" என்பார்.உலகப் பொதுமறை தந்த வள்ளுவனை, பார்ப்பனரின் சமஸ்கிருத மொழிக் கல்லூரியின் துணை கொண்டு விளக்கியவர் தான் இந்த கமல்.

                             * "அன்பே சிவம்" படத்தில் சிவனை வணங்கும் நாசரை வில்லனாகவும், அப்படத்தில் வரும் நாய்க்கு, சங்கரன் (சிவன்) எனப் பெயர் வைத்து சைவத்தை மட்டும் எதிர்த்த வைணவப் பகுத்தறிவாதி தான் கமல்.

                             *  "வசூல்ராஜா" படத்தில் ஒரு காட்சியில், சுவாமிநாதன் எனும் சைவப்பெயரை அழைக்க மறுத்து, மீண்டும் மீண்டும் கோபிநாத் என்ற வைணவப் பெயராலேயே அழைப்பார். மற்றொரு காட்சியில் "அன்பேசிவம்" என்று ஒருவர் சொன்னதை மறுத்து "அன்பே வெங்கடாசலம்" என்று வெளிப்படையாகவே வைணவ ஆதரவு வசனம் பேசியவர் தான் கமல்.

                             * "தசாவதாரம்" படத்தில் ரங்கராஜநம்பியாக தோன்றி இராஜராஜ சோழன் வைணவத்தை வெறுத்தாகக் காட்டி, தனது வைணவக் கொடியை நாட்டியவர் தான் கமல். இராஜராஜ சோழனையே பிழை உள்ளவனாய்க் காட்டி
தமிழர்களின் இன உணர்வைக் கொச்சைப் படுத்தியவர் தான் கமல்.

                             * "தசாவதாரம்" படத்தில் "கல்லை மட்டும் கண்டால்" பாடலில் "இராஜலட்சுமி நாயகன் ஸ்ரீநிவாசன் தான் ஸ்ரீநிவாசன் சேய் இந்த விஷ்ணு தாசன் தான்" என தன கருத்தைப் பதித்தவர் தான் கமல். (இவ்வடியில் வரும் இராஜலட்சுமி கமலின் தாயார்; ஸ்ரீநிவாசன் கமலின் தந்தையார் என்பதை நினைவில் கொள்க)
                                    
                             * "தசாவதாரம்" படத்தில் "சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம், அவனது கர்வம் தவிர்க்கச் சொல்" என்றும், "இன்னபிற தோஷங்களுடன் பிரம்மஹத்தி தோஷமும் பிடிக்கும் என்று சொல்" என்று பார்ப்பனரின்  ஆயுதத்தை தனது தந்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியவர் தான் கமல். (பிரம்மஹத்தி தோஷம் என்பது பார்ப்பனரை பழித்தால்; அவர்கள் சொல் படி நடக்க மறுத்தால் வரும் தோஷம் என்பதை நினைவில் கொள்க)

                            * "மன்மதன் அம்பு" படத்தில் ஈழத்து இளைஞர், நடிகை திரிஷாவிடம்,  "நான் உங்கள் செருப்பாகவும் நடிக்கத்தயார்" என்று கெஞ்சுவதாகக் காட்டி, தமிழினத்தையே கொச்சைப் படுத்திய பச்சை  பார்ப்பனன் தான் கமல்.

                             * தனது பெயரை கமல்ஹாசன் என்று இருந்ததை கமலஹாசன் என்று எண்சோதிட முறைப்படி மாற்றி எண்சோதிடத்தை ஏற்றுகொண்ட பகுத்தறிவுவாதி தான் கமல்.

                             * தனது மகளுக்கு "ஸ்ருதி" என சமஸ்கிருதப் பெயரிட்டு, தனது பார்ப்பானியத்தை வெளிப்படுத்தியவர் தான் கமல்.(வேதத்தை அருகில் அமர்ந்திருந்து கேட்பவர் அதாவது பார்ப்பனர் என்பதே ஸ்ருதி என்பதன் மறைபொருள்)

                             * மகள் ஸ்ருதியை பள்ளியில் சேர்க்கும்போது, சாதி எனும் கட்டத்தை நிரப்பாமல் சாதியை ஒழிப்பதாகச் சொல்லி, வகுப்புவாரி பிரதிநிதித்துவதிற்கு எதிராக தந்திராமாக செயல்பட்டவர் தான் கமல். (பார்ப்பனருக்கு சலுகை கிடையாது; இவரை நாமும் பின்பற்றி சாதியைத் துறந்தால், நமது சலுகையை இழப்போம்; மீண்டும் தகுதி அடிப்படை என்ற பெயரில் பார்ப்பனியம் வளரும், என்பதே அவரின் தந்திரம்)

                            * தனது கலை வாரிசாக பல திறமை மிக்க நடிகர்கள் இருந்தும், தனது இன நடிகரான மாதவனை (வைணவப் பார்ப்பனர்) அறிவித்தவர் தான் இந்த விஷ்ணுதாசக் கமல்.

பார்ப்பனியத்தைப் பற்றி அய்யா பெரியார் சொன்னது, 

                                                 ஆரிய மலம் 

         "சாதத்தில் ஒரு பாகத்தில் சிறிது மலம் விழுந்தாலும் முழுச்                      
          சாதத்தையும் எப்படி ஒதுக்கிவிடுகிறோமோ அது போலவே,
          ஆரிய நுழைவு ஏற்பட்ட எல்லா விசயங்களையும்
          முழுவதுமாக ஒதுக்கி விட வேண்டும் என்கிற உணர்ச்சியுடன்
           தான் நீங்கள் காரியங்களை நடத்தவேண்டும்"
                                                                        ---௦01.10.1976 "உண்மை" 

                          கமலஹாசன் கருப்புச்சட்டைப் போட்டுக் கொண்டு காவிப் பரப்புரை செய்யும் பார்ப்பனர் என்பதை இதன் மூலம் உணர்ந்த்திருப்பீர்கள். இல்லாவிடில், அவர் மேற்கொண்டு நடிக்கும் படம், பாடல், வசனம், பாத்திரம், ஆகியவற்றை இக்கட்டுரையின் துணை கொண்டு பார்த்தால் உண்மை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
                                                                           
                                                              -----------இராவணப்  பாண்டியன்--------------