செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வற்றாத தாமிரபரணி ஓடையாகிறது

திருநெல்வேலியில் உருவாகி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் வற்றாத சீவநதி தாமிரபரணி. இவ்விரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதரமாகவும்,லட்சக்கணக்கான எக்கர் விவசாய நிலங்களுக்கு மூல ஆதாரமாகவும் தாமிரபரணி விளங்குகிறது. கோடையிலும் வற்றாத தாமிரபரணி மணல் கொள்ளையால் மாறிவருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் முதல் முக்காணி வரை அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் ஆறு முற்றிலும் பாழ்பட்டு காணபடுகிறது. ஏரல்,தென்திருப்பேரை,குரங்கனி,வாழவல்லான்,உமரிகாடு,முக்காணி என அனைத்து ஊர்களிலும் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, முடிந்தவரை மணல் அள்ளப்பட்டுவிட்டது. இந்த மணல் கொள்ளையில் எந்த கட்சியும் கொள்கை மாறுபட்டவர்களாக இல்லை. இதனால் தாமிரபரணி நதி நீர் பாதுகாப்பு பேரவை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு மணல் அள்ளப்படுவது நிறுத்தப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு,விவசாயத்திற்கு நீர் இல்லாநிலையில் திருவைகுண்டம் பகுதியிலிருந்து,ராட்சத குழாய்கள் மூலம் தூத்துக்குடியிலுள்ள பிரபல ஆலைகளுக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. நாள்தோறும் கணக்கில் அடங்காத அளவு நீர் இவ்வாலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

                         ஏற்கனவே செழிப்பாக காணப்பட்ட உடன்குடி பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, நிலத்தடி நீர் உப்பாகிவிட்டதால் விவசாயம் முற்றிலும் அழிந்து வருகிறது. தற்போது, தாமிரபரணியின் நிலை, தனியார் ஆலைக்கு தண்ணீர் உறிஞ்சும் செயலைப் பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் திருவைகுண்டம் பகுதியிலும் கடல்நீர் நிலத்தடி நீராக மாறுவது உறுதியாகிவிட்டது.
                   
                         தாமிரபரணி ஆற்று நீரை நம்பி நெல் மற்றும் வாழை விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதை பார்த்து கலங்கி நிற்கின்றனர். ஏரல்,பெருங்குளம்,வாழவல்லான்,சாயர்புரம்,சிவத்தையபுரம்,உமரிக்காடு பகுதிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வளங்கப்படாததால்  நெல் பயிர் கருகிவிட்டது. வாழை மரங்கள் வாடிவிட்டது. இதனால் விவசாயிகள் மீதி உள்ள பயிர்களை காக்க ஆயில் மோட்டார்,லாரி தண்ணீர் கொண்டு விவசாயம் செய்கிறார்கள். விவசாயிகளின் இந்த அவலநிலையைக் கண்டும் தனியார் ஆலைகளுக்கு நீர் வழங்கும் நடவடிக்கையை அரசு தொடர்வதன் காரணம் புரியவில்லை. மேலும் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு நீர் கிடைக்காததால்,பொதுமக்களிடையே ஊருக்கு ஊர் மோதல் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

                             அமலைச் செடி,முட்செடி மற்றும் தனியார் ஆலை ஆக்கிரமிப்பினால்,ஆறு மாசுபட்டு பாழடைந்து வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து குடிநீர்,விவசாயத்திற்கு மட்டும் தாமிரபரணி நீரை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இல்லாவிடில் தாமிரபரணியை நம்பியுள்ள விவசாய நிலங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல் குடிநீர் இல்லாத காரணத்தால், மக்கள் ஊரையே காலி செய்துவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக