பண்ரூட்டி ராமச்சந்திரன், கோவை பொதுக்கூட்ட மேடையில் ஜெயலலிதா முன்னிலையில் சொன்ன வார்த்தையைப் போல, இன்று முதல்வராக ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தும் தமிழக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது, எதிர்க் கட்சித் தலைவராக ஜெ.ஜெயலலிதா எவ்வாறு செயல்பட்டாரோ, அதே பாணியில் இன்று விஜயகாந்த் செயல்படுவதாகத் தான் தோன்றுகிறது. இப்படி பொறுப்பு மிக்க பதவியை வைத்துக் மௌனமாய் இருப்பதன் காரணம் என்ன?
நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்களில் கலந்துகொள்ளாத விஜயகாந்த், இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்றைய நாளில் கூட ஜெயலலிதாவையோ, இலவசங்களையோ எந்த குறையும் கூறவில்லை. சென்ற ஆட்சியின் இலவசங்களை, "அரிசி இரண்டு ரூபாய்க்குக் கொடுத்தால் போதுமா? கொழம்பு வைக்க இருபத்தைந்து ரூபாய் வேண்டுமே" என்று தடாலடியாக வெளுத்து வாங்கிய கேப்டன், இன்று இலவச அரிசி, கிரைண்டர், மிக்சி, பேன், கறவை மாடுகள், ஆடுகள், லேப்டாப், வேட்டி, சேலை, என ஐம்பது இலவசப் பொருட்கள் அறிவிக்கப்பட்டும். இது குறித்து "இந்த திட்டம் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள், இதை குறைசொல்பவர்கள் கண் இருந்தும் குருடர்கள்" என்று கூறுகிறார்.
இந்த ஆட்சியின் பெரிய சறுக்கலான சமச்சீர் கல்வியின் நிலைப்பாடு பற்றி "நாங்கள் கேட்பது குதிரை; கருணாநிதி கொடுத்தது கழுதை" என்று அரசுக்கு ஆதரவாக பேசினார். மேலும் இது பொதுப் பாடத் திட்டமே தவிர, சமச்சீர் கல்வி அல்ல என்றும்,உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின்னும், "இந்த தீர்ப்பு வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், இது சமச்சீர் கல்விக்கு வழிவகுக்குமா?" என்று சுற்றி வளைத்து எந்த முடிவுக்கும் வராமலேயே தனது உரையை முடித்தார்.
இயல்பில் விஜயகாந்த் வெள்ளந்தியாகப் பேசக்கூடியவர். அடுக்கு மொழியோ, அலங்கார வார்த்தைகளோ இல்லாமல், மனதில் பட்டதை அப்படியே சொல்லக்கூடியவர். இப்படிப் பட்டவர் இன்று அடக்கி வாசிப்பதன் காரணம் என்ன?
காரணம்:-
இன்றைக்கு 29 எம்.எல்.ஏக்கள் தான் இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக கேப்டனுக்காக ரசிகர் மன்றம் நடத்தி எந்த பதவியும் பெறாத எத்தனையோ ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்சி தொடக்கி, கைகாசுகளைப் போட்டு இன்று வரை கட்சியை வளர்த்து வரும் நிர்வாகிகள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் சின்னப் பதவியாவது வாங்கித் தர வேண்டும் என்று என்று விஜயகாந்த் துடிக்கிறார். தேவை இல்லாமல் கூட்டணியில் குழப்பம் செய்து வெளியே வந்தால், என்ன ஆகப்போகிறது? எனவே தான் ஒரு மௌன சாட்சியாக இருந்து அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார். இதைப் பயம் என்று சொல்கிறார்கள். சிலர். பிளான் என்று சொல்கிறார்கள் சிலர். "எதுவாக இருந்தாலும் விஜயகாந்துக்கு நன்மை தான்" என்கிறார்கள் தே.மு.தி.க.வினர்.
அதிரடி நாயகன் திடிரெனக் குடும்ப சென்டிமென்ட் படத்தில் நடித்தால் போரடிக்கும் அல்லாவா? அபபடித்தான் இருக்கிறது விஜயகாந்தின் நடவடிக்கைகள்.
"எப்பவுமே அடிதடியில நடிச்சிட்டே இருந்தா, எனக்கும் போரடிக்காதா? என்று விஜயகாந்த் சொல்வார்.
இறுதியாக, இது அரசியலா? சினிமாவா? என்று கேள்வி எழலாம்!
"நமக்கு இரண்டுமே ஒன்று தானே."
--------------------இராவணப் பாண்டியன் ----------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக